Monday, April 28, 2014

ஸமீரா அலி நஜாத்:கருணையின் நிறைகுடமான அன்னை!

TOPSHOTS-IRAN-SOCIAL-EXECUTION-ISLAM
ஈரான் நாட்டில் கடைசி நேரத்தில் தூக்கு கயிறில் இருந்து குற்றவாளியைக் காப்பாற்றிய கொல்லப்பட்ட நபரின் தாய்! என்ற செய்தி கடந்த வாரம் ஊடகங்களிலும், சமூக இணையதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.யார் அந்த தாய்? தனது மகனை கொன்றவனுக்கு மன்னிப்பு வழங்க அந்த அன்னைக்கு எவ்வாறு முடிந்தது? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது.
2007-ஆம் ஆண்டு தெருச் சண்டை ஒன்றில் அப்துல்லாஹ் ஹுஸைன் ஸாதிக் என்ற தனது நேசத்திற்குரிய மகனை பறிகொடுத்து தீராத துக்கத்தை சுமந்துகொண்டு வாழ்ந்த ஸமீரா அலி நஜாத் என்ற அந்த அன்னைக்கு மீண்டும் ஒரு பேரிடி.நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் விபத்து ஒன்றில் தனது இளைய மகனையும் பறிகொடுத்தார்.இது என்ன சோதனை? துயரத்தின் தீரா நினைவுகளை சுமந்துகொண்டு இரவு,பகல்களை கழித்து வந்தபோதுதான் 7 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மகன் அப்துல்லாஹ்வை கொலைச் செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்த செய்தி அவருக்கு கிடைத்தது.

10 மாதம் சுமந்து பெற்ற 19 வயதான தனது ஆருயிர் மகனை கொலைச்செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் விதித்த மரணத்தண்டனையை நேரில் காண வந்திருந்தார் அன்னை ஸமீரா அலி.குற்றவாளிக்கு மரணத்தண்டனயை நிறைவேற்றும் நடவடிக்கைகளை அதிகாரிகள் துவக்கினர்.கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டன.முகம் கறுப்புத் துணியால் மூடப்பட்டது.தூக்கு மேடையில் குற்றவாளி ஏற்றப்பட்டார்.கழுத்தில் கயிறு சுற்றப்பட்டது.இனி லீவரை அழுத்தவேண்டியது மட்டுமே பாக்கி.அவ்வளவு நேரமும் தனது மகனை கொன்றவரின் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கைகளை ஒரு பார்வையாளராக நின்று கண்டுகொண்டிருந்த அந்த தாயின் இதயம் பிசைந்தது.அவரை நோக்கி ஓடிச் சென்றார்.குற்றவாளியின் கழுத்தில் சுற்றப்பட்ட கயிறையும், முகத்தில் அணிவித்திருந்த துணியையும் அவரே விலக்கினார்.தனது செல்ல மகனை கொலைச் செய்தவனுக்கு மன்னிப்பு அளித்துவிட்டு கண்ணீர் மல்க அவ்விடத்தை விட்டு அகன்றார் அந்த தாய்.கண்ணீர் வற்றிய கண்களில் கருணையின் ஒளி பிரகாசிக்கும் அந்த தாயை அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் மக்கள் பார்த்துக்கொண்டிருந்தபோது, தன்னை கடைசி வேளையில் தூக்கில் இருந்து தப்பிக்க வைத்த அந்த தாய்க்கு நன்றி கூட தெரிவிக்க முடியாமல் ஸ்தம்பித்து நின்றுக்கொண்டிருந்தார் குற்றவாளியான அந்த நபர்.
IRAN-SOCIAL-EXECUTION-ISLAMதனது இரண்டு மகன்களையும் பறிகொடுத்த வேதனையை அனுபவித்திருந்த அந்த தாய், ஒரு வேளை தனது மகனை கொலை ச்செய்தவனின் தாயைக்குறித்து சிந்தித்திருக்கலாம்.தான் அனுபவித்த வேதனையை இன்னொரு தாய் அனுபவிக்க கூடாது என்ற நல்லெண்ணமாக இருக்கலாம்.பத்து மாதம் சுமந்து உடல் உபாதைகளையும், வேதனைகளையும் பொறுத்துக்கொண்டு இரு ஆண் மகன்களை பெற்றெடுத்த அந்த தாய், அவ்விருவரையும் இழந்தபோது உள்ளத்தால் துடித்துப்போயிருப்பார்.அந்த வேதனையை வெகு விரைவில் மறக்கத்தான் முடியுமா?ஆனாலும், தனது மகனை கொன்றவனை தனது கருணையால் விடுவித்தார்.இங்கேதான் அன்னை என்ற வார்த்தையின் பூரணமான பொருளை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.
IRAN-SOCIAL-EXECUTION-ISLAMமனித உள்ளங்களில் அகிலங்களை படைத்த இறைவனாகிய அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கும் கருணைதான் அந்த மன்னிப்பின் பொருளாகும்.இந்த அன்னையின் கருணை, நம்மைப் படைத்த இறைவனின் கருணையில் நூறில் ஒரு பகுதியாகும்.அவ்வாறெனில் அந்த மாபெரும் படைப்பாளனான அல்லாஹ்வின் கருணை எவ்வளவு அபாரமானது!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:”அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது.”(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம் , திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத், தாரமீ)
அ.செய்யது அலீ
Source : thoothuonline.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza